வெல்கம் ஹோம்

வெல்கம் ஹோம்

 

“அன்வி, அதான் பாட்டி சொல்றாங்கள கேளு. எனக்கு என்னமோ நீ பண்றது கொஞ்சம் கூட பிடிக்கல” என அன்வியின் தாய் ஜெயா கூறினார்.

 

“ம்மா, நீங்களுமா அந்த கதை எல்லாம் நம்புறீங்க, நம்ம இருக்கிறது 21st சென்சூரி. இப்போ போயிட்டு பேய் கதை எல்லாம் நம்பிட்டு” என்றாள் சாதாரணமாக.

 

“என்னடி வாய் நீளுது, இந்த காலத்துல சொல்றது மட்டுமே சரி, அந்த காலத்துல சொன்னது எல்லாமே தப்புனு நம்புறதை முதல்ல நிறுத்து. நீ உருப்புடாம போறதுக்கு அது தான் காரணமே. வந்துட்டா பேசுறதுக்கு” என கடைசி வாக்கியம் மட்டும் முணுமுணுத்தார்.

 

“எது… அந்த காலத்து சொன்னது எல்லாமே சரியா? குழந்தை திருமணம் சரியா, பெண்களை உடன்கட்டை ஏறுனது சரியா? பொண்ணுங்க படிக்கவே கூடாதுனு சொன்னது சரியா? ஆம்பளைங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணாங்களே அதுவாச்சும் சரியா?” என நாத்திகம் பேச 

 

அதில் எரிச்சலானவர், “நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற அன்வி. சில விஷயம் தப்பு தான், ஆனா எல்லா விஷயமும் இல்லை. நீ அங்க போக கூடாது, எனக்கு பிடிக்கல. எனக்கு மட்டும் இல்லை உன்னோட பாட்டிக்கும் தான். இதுக்கு மேல பேசி என்னோட காதை செவிடாக்காத எதுவா இருந்தாலும் அப்பா கிட்ட பேசிக்கோ” என சொல்லிவிட்டு சமையலை கவனிக்க சென்றுவிட்டார்.

 

அன்வியின் பாட்டி இந்திராவோ வீல் சேரில் அவர் அறையில் உட்காந்துக்கொண்டு வெளியே இருட்டை வெறித்த படி, முணுமுணுத்துக்கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்தால் ‘அங்க போகாத, ஆபத்து, ஆபத்து’ என்ற வார்த்தை மட்டுமே அவரிடம். 

 

அன்விக்கு, தாயின் கூற்றும் முட்டாள் தனமாகவே பட்டது. அவள் அறைக்குள் வர…. அறை முழுவதும் பொம்மைகள் தான். எல்லாம் அருகில் கடைகளில் கிடைக்கும் பொம்மை இல்லை, பல இடங்களில் தேடி திரிந்து, வெளிநாடுகளுக்கு சென்ற போது வாங்கியது என எல்லாமே அதிகம் கிடைக்காத தனித்துவமான பொம்மைகள். அங்கிருந்த அவளின் மிகவும் விருப்பமான பிரவுன் கலர் கரடி பொம்மையை எடுத்தவள் 

 

“பாரு டா கீட்டோ அம்மா என்ன சொல்றங்கனு, நான் அந்த பழைய வீட்டுக்கு போய் அந்த டால் ஹவுஸ்ச (doll house) எடுக்க கூடாதாம். அது எவ்வளவு யுனிக் (unique) பீஸ் தெரியுமா, அது மட்டும் என்னோட காலெக்ஷன்ல சேர்ந்தா தான் கம்ப்ளீட் ஆனா மாதிரி இருக்கும். அம்மா ஏன் இதை புரிஞ்சிக்கவே மாட்டிக்கிறாங்க”

 

சிலருக்கு இது போன்ற அப்ஷஷான் (obsession) உண்டு, குறிப்பிட்ட பொருட்களை சேகரிப்பது, இது தான் அன்விக்கும் இருக்கிறது. அவளுக்கு பொம்மைகள் என்றால் கொள்ளை பிரியம். தேடி தேடி வாங்கி குவித்து வைத்திருக்கிறாள்.

 

பின் அந்த கீட்டோ என்ற கரடி பொம்மை அருகில் சின்ன பெண் போல் இருக்கும் பொம்மையை கையில் எடுத்தவள் அதனை கண்ணாடி முன்பு அமர்த்தினாள். அது நீல வண்ணத்தில் உடை அணிந்திருக்க, அதே போல் உடையை அவளும் அணிந்துக்கொண்டாள். அந்த பொம்மைக்கு போனி டைல் போட்டிருக்க, அன்வியும் விரித்து இருந்த கூந்தலை அதே போல் போனி டைல் போட்டுக்கொண்டாள். இறுதியில் அந்த பொம்மை போலவே மேக் அப் செய்து கண்ணாடியில் ஒரு முறை பார்த்த பின் தான் திருப்தி ஆனாள்.

 

சுற்றி இருந்த பொம்மைகள் யாவும் இவளை பார்ப்பது போலவே இருக்க “நானும் உங்கள்ள ஒருத்தி மாதிரி அழகா இருக்கேனா?” என அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

 

அப்போ ஜெயா வந்து கதவை தட்ட “அடியேய் அன்வி, எவ்வளவு நேரமா கதவை தட்டுறது. சீக்கிரம் வா டி சாப்பிட, இவளுக்கு கத்தி கத்தியே என்னோட ஜீவன் போகுது” என புலம்பினார்.

 

தாயை இன்னும் கதற வைத்த பிறகு “ம்மா, மெதுவா கூப்டாதான் என்னவாம்?” என அவளும் கதவை திறந்துக்கொண்டு எரிச்சலில் பேச 

 

“சொல்லுவ டி சொல்லுவ, நான் அப்போதுல இருந்து உன்ன தான் கூப்டுட்டு இருக்கேன். இது என்னடி முகத்துல மேக்அப் இந்நேரம் போட்ருக்க”

 

“சும்மா போட்டு பார்த்தேன் மா, நல்லா இருக்கா?” 

 

“அதுக்கு என்ன?! அன்வி எப்பவுமே அழகு தான்” என சொன்னவாறே தந்தை ராஜ்வீர் வந்தார்.

 

அப்பாவும் மகளும் ஒரு கட்சி ஆகிவிட ஜெயா தான் தனித்து விடப் பட்டார், எப்பொதும் போல் முணுமுணுவென்று ‘இனிமேல் ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற அலப்பறை தாங்காதே’ என வாய்க்குள் சொல்லிக்கொண்டார்.

 

“நீங்க போய் கைய கழுவிட்டு வாங்க, சாப்பிடலாம். அன்வி வந்து உட்காரு. நான் போய் பாட்டிய கூப்டு வர்றேன்” என்றார்.

 

இருள் சூழ்ந்த அந்த அறையில் ஒரு ஓரமாக வீல் சேரில் அமர்ந்திருந்த இந்திரா பாட்டியோ கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரம் மாதிரி சொல்லிக்கொண்டிருந்தார். 

 

“அத்தை, வாங்க சாப்பிட போகலாம். இவங்களும் (ராஜ்வீர்) வந்துட்டாங்க” என பவ்வியமாக கூப்பிட, 

 

ஜெயாவை திரும்பி பார்த்த அவர் கண்கள் புரை வந்து கருவிழிகள் வெள்ளையாக இருந்தது. மங்களாகவே கண்கள் தெரியும்.

 

அவரின் தோற்றம் பயமாக இருந்தாலும் சாதாரணமாகவே நின்றார்.

 

“ஹ்ம்ம், போகலாம்” என்ற அளவான வார்த்தை மட்டுமே அவரிடம். வீல் சேரை தள்ளிக்கொண்டு டைனிங் டேபிள் வர, ராஜ்வீரும் வந்தார்.

 

அமைதியாக நால்வரும் சாப்பிட அன்வி தான் பேச்சை ஆரம்பித்தாள். 

 

“அப்பா, எனக்கு ஒன்னும் வேணும்” அதற்கு ஜெயாவிடம் இருந்து முறைப்பு வர, அதனை கவனிக்காதவள் போல் திரும்பிக்கொண்டாள்.

 

“என்ன பொம்மை டா வேணும் சொல்லு, அப்பா வாங்கி தர்றேன்”

 

“பொம்மை இல்லை பா, பொம்மை வீடு வேணும்”

 

“சரி வாங்கிடலாம். இப்போ சாப்பிடு”

 

“எனக்கு பழைய பொம்ம வீடு தான் வேணும்”

 

“ஏன் டா புதுசாவே வாங்கிக்கலாம்”

 

“அதுக்கு இல்ல ப்பா, பழசு ஒரு ஆன்ட்டிக் (antique) பீஸ் ஒன்னு இருக்கு அது தான் வேணும்” குரலில் கொஞ்சம் பிடிவாதம்.

 

“ஓஓ, எங்க இருக்கு டா அது?”

 

“பாட்டி ஓட பழைய வீட்ல” என சொன்னதும் ராஜ்வீர் ஸ்லொவ் மோஷனில் அன்வியை பார்க்க, அந்த பார்வையே அவர் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்று சொன்னது.

 

“நீ அங்க போக கூடாது” என அதிகாரமாக வந்தது இந்திரா பாட்டியிடம் இருந்து.

 

“பாட்டி ப்ளீஸ், எனக்கு உங்களோட அந்த பழைய டால் ஹவுஸ் வேணும். நீங்க தான போட்டோ காட்டுனீங்க. அப்படி ஒன்னு நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. உங்களோடத எனக்கு குடுக்க மாட்டிங்களா?” என கெஞ்சும் குரலில் கேட்க 

 

“அங்க ஆபத்து, ஆ.. ஆபத்..த்து து” என  விடாமல் ஒரு மாதிரி சொல்லிக்கொண்டே கை ஒருபக்கமாய் இழுக்க, அன்வி அவரின் செய்கையை பார்த்து பயந்தே விட்டாள்.

 

இது மாதிரி இந்திரா சில சமயம் நடந்துக்கொள்வது உண்டு என்பதால் ராஜ்வீர் தான் வீல் சேரில் அவரை அறைக்கு கொண்டு போய் விட்டார்.

 

இதற்கிடையில் ஜெயா “உனக்கு சொன்னா புரியாத அன்வி? உனக்கே தெரியுமே அங்க பல வருஷம் முன்னாடி நிறையா பேரு மர்மமான முறையில காணாம போய்ட்டாங்க. அந்த வீட்ல ஏதோ பேய் இருக்கிறதா கதை எல்லாம் இருக்கு” என சொல்லும் போதே 

 

“குழந்தைக்கிட்ட என்ன சொல்லிட்டு இருக்க ஜெயா” என கண்டித்த படியே வந்தார் ராஜ்.

 

“குழந்தையாம் குழந்த, அவளுக்கு 21 வயசு ஆக போகுது” என நொடித்துக்கொண்டார்.

 

“அதுக்கு என்ன இப்போ? பேய், மர்மம்னு சொல்லிட்டு. அப்படிலாம் அங்க ஒன்னுமே இல்ல. அந்த வீட்ல அடுத்தடுத்து துக்கம் நடந்தது அதான் அந்த வீடு ராசி இல்லனு பெரியவங்க அப்படியே அதை விட்டுட்டு வேற இடத்துக்கு போய்ட்டாங்க. அவ்வளவு தான்” என பொதுவாக சொன்னவர் அன்வி பக்கம் திரும்பி 

 

“டேய், கண்டிப்பா உனக்கு அங்க போயே ஆகணுமா?” என பரிவாக வினாவ.. இந்த பக்கம் ஜெயம் ‘வேண்டாம்’ என்பதை போல் தலையை அசைத்தார்.

 

ஆனால் அன்வி ‘ஆமா’ என்று தலையை அசைக்க 

 

“சரி, போய்ட்டு ஒரு மணி நேரத்துல திரும்ப வந்திடனும். இல்லைனா உங்க அம்மா என்ன உண்டு இல்லனு பண்ணிடுவா” என ஜெயாவை கிண்டல் செய்ய, தந்தையும் மகளும் மட்டுமே சிரிக்க. ஜெயா பயத்தில் அமர்ந்திருந்தார்.

 

ஒரு வாரம் கழித்து…

 

இன்று அங்கே செல்ல போகிறாள், எனவே எப்போதும் கிளம்புவது போல் ஒரு பொம்மையை எடுத்து அதே போலவே அலங்காரம் செய்து கிளம்பினாள். இன்றோ சுருட்டை முடியாக விரித்து விட்டிருக்க, சிவப்பு லிப்ஸ்டிக், ரெட் கலர் ஸ்கிர்ட், வெள்ளை ஷர்ட், கண்களில் கண்ணாடி என பொம்மை மாதிரி அழகாக ரெடி ஆகிருந்தாள். உடன் அவளின் கரடி பொம்மை கீட்டோவையும் எடுத்துக்கொண்டாள்.

 

அன்வி ஜெயாவின் மறுப்பையும் மீறி சாவி வாங்கிக்கொண்டு அந்த பழைய வீட்டை வந்து சேர்ந்தாள். சுற்றிலும் எந்த வீடும் இல்லை. இந்த பெரிய வீட்டுக்கு அருகில் காய்ந்து போன மரம், இங்கே எதுவும் உயிரோடு இல்லை என்பதை பறைசாற்றியது. பகலில் தான் அவள் வந்திருக்க, அந்த வீடு இருந்த இடத்தி மட்டும் லேசாக இருட்டாக இருந்த மாதிரி ஒரு பிரம்மை.

 

எதையும் பொருட்படுத்தாமல் சந்தோசமாக அந்த பொம்மை வீடை எடுக்க உள்ளே சென்றாள். உள்ளே செல்ல பொருட்கள் எல்லாம் போட்டது போட்ட படி இருந்தது. பல ஆண்டுகளாக பூட்டி இருக்கப்பட்டிருப்பதால் ஒரு இடம் விடாமல் தூசி. பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டது போல் சிதறி கிடந்தது. பயமாக இருந்தாலும் அவளின் அப்ஷஷான் உள்ளே போக சொல்லி தூண்டியது. ஹால் அலங்கோலமாய் கிடக்க, அடுத்து ஒரு அறை இருக்க அங்கே அந்த பொம்மை வீடு இருக்கிறதா என்று பார்த்தாள். அங்கும் இல்லமால் போக, ஆர்வமாக சுற்றி இருந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த போது மேலே யாரோ ஓடும் சத்தம் கேட்டது. நடுங்கியே விட்டாள், கைகளில் இருந்த அவளின் கீட்டோவை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். 

 

அவள் பாட்டியும் கூப்பிட்டு எச்சரித்திருந்தார், இந்த வீட்டில் ஒரு பேய் இருக்கிறது என்று. அது எல்லாம் இப்போது நியாபகத்துக்கு வந்தது. இத்தனை ஆண்டு பூட்டி இருந்த வீட்டுக்கு யாரு வர போகிறார் பூனையாக இருக்கும் என தனக்கு தானே சமாதானம் செய்த பின் மாடியை நோக்கி சென்றாள்.

 

கைப்பிடி உடைந்தும், சில படிகள் விரிசல் விட்டும் இருக்க, ஜாக்கிரதையாக மேலே வந்தாள். அங்கிருந்த ஜன்னல் திறந்து வெளியில் பார்க்க, ஈ, காக்கா என உயிரினம் இருக்கும் எந்த தடமும் இல்லை. இப்போது ஒரு முணுமுணுப்பு குரல் காற்றில் வர, உலர்ந்து போன வியர்வை மீண்டும் வந்தது. அங்கிருந்த அறையின் திரைசீலை காற்றுக்கு அசைந்தது. 

 

மனமோ அங்கு தான் அந்த பொம்மை வீடு இருப்பாத தோன்ற “கீட்டோ, நீ என்ன நினைக்கிற? நம்ம திரும்ப போலாமா இல்ல அந்த ரூம் மட்டும் ஒரு முறை பார்த்துட்டு போயிடலாமா?” என அந்த உயிரற்ற பொம்மையிடம் கேட்க… அதுவோ ‘சிரிப்பது’ போல் அவளுக்கு தோன்ற 

 

“சரி, நீ சொன்ன மாதிரியே அந்த ரூம் மட்டும் பார்த்துட்டு ஓடிடலாம். இந்த வீடே விசித்திரமா இருக்கு” என சொல்லிய படியே அந்த அறையை நோக்கி சென்றாள்.

 

அந்த அறைக்கு நுழையும் போதே மீண்டும் முணுமுணுவென சத்தம். அது காற்றில் சத்தம் என அதனை ஓரம்கட்டினாள். அறை மிகவும் பெரியதாக இருந்தது, அந்த சத்தம் காது அருகில் கேட்க அதுவும் கற்பனை என்றே நினைத்துக்கொண்டாள். அந்த சத்தம் இப்போது சுவற்றில் ஊடுருவது போல் இருக்க, அப்போது அவளை கவர்ந்தது அறை ஓரத்தில் டேபிள் மேல் துணி போட்டு மூடி வைக்க பட்டிருந்த பொருள்.

 

கீழே கிடந்த பொருட்களை தாண்டி வேகமாக சென்று அந்த துணியை விலக்க, அதே தான்! அவள் தேடி வந்த பொருள். டேபிள் மேலே இருந்தாலும் இவள் தலை வரை இருந்தது அதன் உயரம். மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது அந்த பொம்மை வீடு. அதில் வெளியில் இருந்த பலகையில் ‘வெல்கம் ஹோம்’ என எழுதிருந்தது. இரண்டு மாடி மரத்தால் ஆன வீடு அது. கொஞ்சம் குனிந்து ஹால்ல கதவை திறந்து பார்க்க, உள்ளே ஒரு குடும்ப வசிக்கும் தேவையான பொருட்கள் எல்லாம் குட்டியாக அழகாக இருந்தது. கீழே விரிக்கும் மேட் கூட தத்ரூபமாக இருந்தது. அடுத்தது கிட்சேன் இருக்கும் ஜன்னலை திறந்து பார்க்க, அந்த காலத்தில் உபயோகம் பண்ண விறகு அடுப்பு இருந்தது. அங்கே ஒரு பெண் தூக்கி போட்ட கொண்டையும், இடுப்பில் சொருகிய சேலையுடன் பயத்தில் நின்றுக்கொண்டிருப்பது போல் ஒரு பொம்மை வேறு. அடுத்து மாடியில் இருக்கும் ஒரு அறை கதவை திறந்துக்கொண்டு,

 

“இதை செஞ்சவங்க ரொம்ப கலைநயத்தோடு செஞ்சிருக்காங்க, இல்ல கீட்டோ” என பொம்மையிடம் பேசவும் மறக்கவில்லை.

 

பொம்மை வீட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டே அவளை சுற்றி நடப்பதை மறந்தாள். அவள் அந்த பொம்மை வீட்டின் ஹால் கதவை திறந்த உடனே இந்த வீட்டில் கதவு மூடியது. மாடி அறை கதவை திறக்கும் போது, இவள் தற்போது நிற்கும் வீட்டில் கதவு மூடியது.

 

அந்த பொம்மை வீட்டின் மாடியில் ஒருவர் ஜமீன் உடை போட்டு சாமி படம் முன் நின்றிருந்தார். மற்றொரு அறையின் இரு குழந்தைகள் ஒருவரின் ஒருவர் கையை பிடித்துக்கொண்டு  கட்டில் மேலே பயத்தோடு அமர்ந்திருந்தனர். 

 

இப்போது தான் அன்வி முகத்தில் பொறி தட்டியது. இதுவரையிலும் அந்த பொம்மை வீட்டில் பார்த்த வரைக்கும், அனைத்து பொம்மை மனிதர்கள் முகத்திலும் பயம் தான் இருந்தது. பொதுவாக பொம்மையின் முகத்தில் சிரிப்பு தானே இருக்கும், எனவே இது இவளுக்கு விசித்திரமாக பட்டது. மீண்டும் அந்த பொம்மை வீட்டில் ஹால் கதவை திறக்க அங்கே ஒரு ஆணின் பொம்மை அமர்ந்துகொண்டு இருப்பது போல் இருந்தது. மேலும் மூச்சு விடுவதை போல் அவர் வயிறு லேசாக ஏறி இறங்கியது. 

 

அன்வியோ ‘முதல்ல ஹால் கதவை நான் திறந்த அப்போ இந்த பொம்மை இங்க இல்லையே’ என யோசித்துக்கொண்டே, அந்த குழந்தைகள் இருந்த கதவை மீண்டும் திறந்து பார்க்க, கட்டில் மேல் அமர்ந்திருந்தவர்கள் இப்போது கட்டில் கீழே மறைந்துக்கொண்டு இருந்தனர். ஏதோ சந்தேகமாக இருக்க, கிச்சேனின் அந்த பெண் என்ன செய்கிறாள் என பார்க்க, அவளோ அன்வி இருந்த பக்கம் திரும்பி அதீத பயத்தோடு பார்ப்பது போல் இருந்தது. அப்போது தான் புரிந்தது அந்த பொம்மை மனிதர்கள் எல்லாம் இவள் இருக்கும் திசையை பார்த்து பயப்படுவது.

 

கைகள் நடுங்கியது பயத்தில், நெற்றி, கழுத்து, முதுகு என எல்லாம் இடங்களிலும் வியர்வை. கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு மற்றொரு அறையை திறக்க அதில் அலங்கார பொருட்டாக இருந்ததே தவிர மனித பொம்மைகள் இல்லாமல் வெறுமையாக இருந்தது. ‘என்ன இந்த அறையில யாருமே இல்ல’ என நினைத்துக்கொண்டே பார்வையை சுழல விட்டாள். 

 

அப்போது அவள் கண்ணின் சிக்கியது சுவற்றி மட்ட பட்ட ஒரு கண்ணாடி. ஏதோ ஒரு உந்துததில் அதில் முகம் பார்க்க, முழுமையாக தெரியவில்லை. பொம்மை கண்ணாடியில் அவ்வளவு தானே தெரியும், முகத்தை அங்குமிங்கும் ஆட்டிய போது பின்னாடி தெரிந்த காட்சியில் உறைந்து போனாள். அதில் ஒரு கருப்பு உருவம் சிவந்த கண்களுடன் அன்வி பின்னாடி நின்றுக்கொண்டிருந்தது.

 

அப்படி ஒரு கோரமான காட்சி, மூச்சு எக்கு தப்பாக விட, உடல் அதிர மீண்டும் அந்த கண்ணாடியில் ஒரு கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு பார்க்க அப்போது பின்னாடி இருக்கும் உருவம் கனவா இல்லை உண்மையா என பார்க்க முற்பட, அது இப்போது அன்வின் தோளில், தீஞ்சு போன கையை வைத்து… பெரிய நகம் கொண்ட கைகளில் அவள் சுருள் முடியை பிடிக்க வீடே அதிர அலறினாள்.

 

அந்த உருவமோ அன்வி காது அருகில் “வெல்கம் ஹோம்” என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, அன்வியை ஒரே தள்ளாக அந்த பொம்மை வீடு மேல் தள்ளியது. 

 

அன்வின் கதறல் காற்றோடு கரைந்து போனது. அவள் விழுந்தும் அந்த வீட்டுக்கு எந்த சேதாரமும் ஆக வில்லை, ஏன் அதே இடத்தில் அப்படியே தான் இருந்தது அந்த பொம்மை வீடு. அன்வி அங்கே வந்த எந்த அடையாளமும் இல்லை. அதில் ஒரே ஒரு மாற்றம் என்ன என்றால் அந்த காலியாக இருந்து கண்ணாடி அறையில் இப்போது ஒரு பெண் பொம்மை கையில் கரடி பொம்மையுடன். சுருட்டை முடியும், சிவப்பு ஸ்கிர்ட், வெள்ளை ஷர்ட், கண்களில் கண்ணாடி, சிவப்பு லிப்ஸ்டிக் போட்ட பொம்மை ஒன்று அமர்ந்திருந்தது. அன்வி போலவே!

 

அன்வி திறந்த அந்த பொம்மை வீட்டின் கதவுகள் தானாக பூட்டிக்கொண்டது. 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top