logo

ரெட் வெல்வெட் | Red Velvet | Episode - 7

Mars

Administrator
ஸ்ருதி - அஞ்சனா!!.. நீ இங்க என்ன பண்ற… சொல்லாம வந்திருக்க. நம்ம வீட்ல எதுவும் பிராப்ளம் ஆ???


ரோஹனுக்கு… ஸ்ருதி சொல்லும் போது தான் தெரிந்தது அது அஞ்சனா என்று. இவள் ஏன் நேரம் கேட்ட நேரத்தில் சொல்லாமல் வந்து இருக்கிறாள், அதுவும் நம் வீட்டுக்கு? என்ற எண்ணம் ரோஹனுக்கும் வந்தது.


அஞ்சனா - அது வந்து ஸ்ருதி… நீ வர நேரம் ஆச்சு ல.. நீ என்னோட ஃபோன் அட்டென்ட் பண்ணல.. அதான் உனக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க வந்தேன்.. அது தப்பா?? என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.


ஸ்ருதி - அஞ்சு, அதான் நான் உனக்கு மெசேஜ் பண்ணேன் ல. நான் நல்லா இருக்கேன்னு சொன்னேனே.. அப்புறம் ஏன்?? என்றாள் புரியாமல்.


இவர்களின் உரையாடலை ரோஹன் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். ஒரு பேச்சுக்கு கூட அஞ்சனாவை அவன் வீட்டுக்கு அழைக்கவில்லை.


அஞ்சனா - அப்போ நீ நல்லா இருக்கியா இல்லையா பார்க்க வந்தது தப்பா?? நைட் ஆகிடுச்சு நீ நேரத்துக்கு வீடு திரும்பலையேனு பதறி போச்சு எனக்கு…


ஸ்ருதிக்கு இருக்கிற தலைவலியை அஞ்சனா நன்றாக ஏற்றிவிட்டாள். ரோஹனுக்கு ரொம்பவே எரிச்சலாக இருந்தது. தோழி ஒரு பையனோட டேட் வந்திருக்கிறாள் என்று கருதாமல் கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் தொல்லை செய்கிறாள் என்றே தோன்றியது.


ஸ்ருதி, ரோஹன் கதவு அருகே நிற்க கதவுக்கு மறுபுறம் (வெளியில்) அஞ்சனா நின்றுகொண்டு இருந்தாள். அப்படியே பேச்சு வாக்கில் உள்ளே வந்துவிட்டாள்.


அப்போது தான் ஸ்ருதிக்கு.. அஞ்சனா மற்றும் ரோஹனை‌ அறிமுகம் செய்யாதது நினைவில் வந்தது.


ஸ்ருதி - அஞ்சனா இது ரோஹன். நான் சொல்லிருக்கேன்ல.. (ரோஹன் பக்கம் திரும்பி) ரோஹன்.. இது என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் அஞ்சனா.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ‘, ஹலோ ‘ என்பதோடு நிறுத்திக்கொண்டார்.


ஸ்ருதி - சரி ரோஹன்… அப்போ நாங்க கிளம்பு…. என முடிக்கும் முன்


அஞ்சனா - ஒரு நிமிஷம்….எனக்கு கொஞ்சம் தண்ணி கிடைக்குமா பிளீஸ்


தண்ணி கேட்பவரிடம் மாட்டேன் என்றா சொல்ல முடியும்… வீட்டுக்கு உள்ளே மூவரும் சென்றனர்.


ரோஹன் கிச்சன் செல்லும் முன்….


அஞ்சனா - இருக்கட்டும்… நானே எடுதுக்கிறேன். நீங்க இருங்க… என்றவள் அடுத்த நிமிடம் கிச்சன் சென்றுவிட்டாள்.


அஞ்சனாவின் பேச்சு, செயல் எதுவும் அவளாக இல்லை என்பதை ஸ்ருதி உணர்ந்தாள். ‘ ஏன் இவா ஒரு மாதிரி நடந்துக்கிறா ‘ ‘ வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அஞ்சனா கிட்ட இனிமேல் இப்படி அவுட்டிங் போற அப்போ இப்படி தொல்லை பண்ண கூடாதுனு சொல்லனும் ‘ என்று ஸ்ருதி எண்ணிக்கொண்டாள். ரோஹன் அஞ்சனாவின் செயலை எப்படி எடுத்துக்கொண்டான் என கவலையாக இருந்தது.


ரோஹன்… ஸ்ருதிக்காக மட்டுமே அமைதியாக இருந்தான். மற்ற அப்படி அவனுக்கு அஞ்சனாவை சுத்தாமக பிடிக்கவில்லை. அவனுக்கு பொதுவாக வெளியாட்கள் வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது இதில் தெரியாத ஒரு பெண் கிச்சன் வரை செல்வது அவனுக்கு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


ஸ்ருதி ரோஹன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஸ்ருதி கெஞ்சலான பார்வையில் ரோஹனைப் பார்க்க… அவள் பார்வையிலேயே அர்த்தத்தை புரிந்தது கொண்டு..


ரோஹன் - இட்ஸ் ஓகே ஸ்ருதி. உனக்காக தான விடு.


தான் வார்த்தையால் சொல்லாமல் புரிந்து கொண்ட ரோஹன் பார்க்க வியப்பாக இருந்தது. அதுவும் அஞ்சனாவின் அநாகரிகமான செயல் அவன் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை ஆனால் தனக்காக பொறுத்துக்கொண்டு என்று நினைக்கும் போது அவன் மேல் ஒரு உரிமை உணர்வு தோன்றியது.




இருவரும் கிச்சனுக்கு முதுகு காட்டி நின்றுக்கொண்டு இருந்தனர். எனவே பின்னாடி அஞ்சனா வந்தது தெரியவில்லை.


ஏதோ உள்ளுணர்வு ரோஹனுக்கு தோன்ற பின்னால் திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான். ஒரு நொடி தான்… சுதாரித்து ஸ்ருதியை தன் பக்கம் இழுத்துக்கொண்டான். அஞ்சனா வீசிய கத்தி குறி தவறியது.


ஸ்ருதிக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. ரோஹன் இழுத்ததும் நிலை தடுமாறி ரோஹன் மேல் வந்து விழுந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கும் போது அஞ்சனா ஒரு மாதிரி சிரித்துக்கொண்டு கையில் கத்தியுடன் நின்றிருந்தாள். பார்த்தவளுக்கு தலை சுற்றியது. நம்பவே முடியவில்லை. அஞ்சனாவா இது ?!!!


ரோஹன் - முதல்ல கத்திய கீழ போடு. எதுக்கு ஸ்ருதிய கொல்ல பார்த்த??? இரு போலீஸ்க்கு ஃபோன் பண்றேன்.


ஸ்ருதி - அஞ்சனா… ஏன் இப்படி பண்ண?? நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன். நம்ம நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆ தான இருந்தோம். என்ன ஆச்சு உனக்கு???!!


ரோஹன் பாக்கெட் இல் துழாவ ஃபோன் இல்லை. ஒரே பதற்றமாக இருந்தது.


அஞ்சனா - ஆமா ஸ்ருதி. நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆ தான் இருந்தோம். எப்போ நீ நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல ஒருத்தரை கொண்டுவர நினைச்சியோ அப்போவே எல்லாமே முடிஞ்சது போச்சு. நீ என்னோட ப்ரெண்ட். என்கூட மட்டுமே இருக்கணும். என்கூட மட்டுமே பேசணும். நான் மட்டுமே உனக்கு முக்கியமா இருக்கணும். புரியுதா??!! என்றாள் மிரட்டலோடு.


ஸ்ருதி, ரோஹனுக்கு புரிந்தது அஞ்சனா மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பது. அவளிடம் என்ன பேசி சரி கட்டுவது என்பது தெரியவில்லை. அவள் சொல்லுவதுக்கு எல்லாம் சரி என்று சொல்லி ஸ்ருதியை அனுப்பி வைக்க முடியாது. கொலை வேற செய்ய முயற்சித்து விட்டாள்.


ஸ்ருதி - அது எப்படி அஞ்சு முடியும். நான் உன்னோட பெஸ்ட் பிரண்ட் தான். ஆனா எனக்குனு தனி வாழ்க்கை இருக்கு. முடிவு எடுக்குற உரிமையும் இருக்கு. எனக்கு உன்னோட சேர்த்து இன்னும் சிலரும் முக்கியம் தான்… நீ மட்டுமே என் வாழ்க்கையில எப்படி இருக்க முடியும் அஞ்சு என்றாள் அழுதுக்கொண்டே.


அஞ்சனா - இருக்கணும். நான் மட்டும் தான் இருக்கணும் ஸ்ருதி. நீ மற்றவங்கட எல்லாம் பேசுற அப்போ எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா?? சொல்லிவிட்டு அழுக ஆரம்பித்துவிட்டாள்…


இவ்வளவு நேரம் மிரடிக்கொண்டு இருந்தவள் தீடீர் என்று அழுக ஆரம்பித்ததும் பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு அஞ்சனா நிலமை மோசமாவது புரிந்தது.


மீண்டும் அஞ்சனா தன்னை தேற்றிக்கொண்டு “நீ எப்போ இவனை நடுவுல கொண்டு வர நினைச்சியோ அப்போவே எனக்கு நீ வேண்டாம். உன்ன கொண்ணுட்டா அஞ்சனா ஹேப்பி “ என சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.



அவள் அவளாக இல்லை என்பது பார்ப்பதிலும் பேசுவதிலும் தெரிந்தது. தாங்கள் கூறும் சமாதானம் எதுவும் அவளை சென்றடையாது என்ற உண்மை புரிந்தது. ஸ்ருதி அழுதுக்கொண்டே இருந்தாள். ஆனால் ரோஹன் இவளிடம் இருந்து தப்பிக்கவே எண்ணினான். இவனிடம் ஃபோன் இல்லை.. ஆனால் பேண்ட் பையில் தொட்ட போது சாவி தென்பட்டது.


நண்பனிடம் பைக் சாவி தான் கொடுத்தான். சாவி கொத்தை எடுத்த போது எல்லா சாவியும் சேர்ந்தே தான் வந்தது எனவே கார் சாவி பையில் தான் இருந்தது.


சிரித்துக்கொண்டு இருந்த அஞ்சனா…மீண்டும் கத்தியை எடுத்து ஸ்ருதியை கொல்ல வர… நொடியும் தாமதிக்காமல் ரோஹன் அவளை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடினான். அப்போது ஸ்ருதி கையில் இருந்த கிஃப்ட் கீழே விழுந்தது.


பின்னாடி சிரித்துக்கொண்டு அஞ்சனா துறத்தி வந்தாள். வாசலில் உள்ள மேட் (door mat) அஞ்சனாவின் நிலை தடுமாற செய்ய… அந்த நொடியில் ரோஹன் ஸ்ருதி ஓட்டத்தில் கொஞ்சம் முன்னே சென்றனர்.


லிஃப்ட் பயன்படுத்தினால் அது மெதுவாக துறக்கும்… மெதுவாக மூடும் அதற்குள் அஞ்சனா உள்ளே நுழையும் வாய்ப்பு உள்ளது. எல்லாரும் உபயோகம் பண்ணும் படி வழியாக இறங்கினாலும் ஆபத்து எனவே எமர்ஜென்சி எசிட் (Emergency Exit) படிகள் இருக்கும் வழியில் செல்லலாம் என்று பிளான் செய்தான்.


இந்த எமர்ஜென்சி வழி எல்லா அபார்ட்மெண்ட்லயும் இருக்காது. அவசர காலத்தில் விரைந்து வெளியே செல்ல பயன்படுத்தும் வழியாகும்.


அதே போல் முதலில் லிஃப்ட், அடுத்து படி கொஞ்சம் தள்ளி எமர்ஜென்சி வழி இருக்க… அந்த கதவை திறந்து உள்ளே சாற்றி கொண்ட நேரம் சரியாக அஞ்சனா அந்த பக்கம் வந்துவிட்டாள். அந்த கதவில்…மறு புறம் பார்க்க சின்னதாக வட்ட வடிவில் கண்ணாடி இருந்தது. அதன் வழியில் அஞ்சனா எந்த பக்கம் போகிறாள் என்று ரோஹன் பார்த்தான்… இருவருக்கும் வேர்த்து, இதயம் பட பட வென துடித்தது. ஸ்ருதி வாய் வழியாக காற்றை சுவாசித்தாள்.


அவளுக்கும் நடக்கும் எதையும் நம்பமுடியவில்லை. காலையில் தன் பாதுகாப்பை கருதிய தோழியாக… இப்போது கொல்ல வருகிறாள் என்பது இன்னும் கனவாகவே தெரிந்தது. ரோஹன் தோளில் செய்துகொண்டாள். அவளின் நிலை உணர்ந்து ஆறுதலாக தலையை தடவி… அவள் காதினுல் மெதுவாக “ கண்டிப்பா தப்பிச்சிடலாம்… நம்பு” என்றான். கண்களில் கண்ணீர், கைகளில் நடுக்கம் இதனின் ஊடே தலையை சரி என ஆட்டிவைத்தாள்.


வெளியே அஞ்சனா குழம்பி போய் நிர்ப்பது தெரிந்தது. லிஃப்ட் இல் சென்றால் சீக்கிரம் கீழே செல்லலாம் என்று யோசிக்கும் திறன் கூட அப்போது இல்லை எனவே படி வழியே இறங்கினாள்.


இதனை பார்த்த ரோஹனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது. வேகமாக ஸ்ருதி புறம் திரும்பி


ரோஹன் - ஸ்ருதி.. ஸ்ருதி…உன் ஃபோன் எடுத்து போலீஸ்க்கு கால் பண்ணு சீக்கிரம். நமக்கு நேரம் இல்லை.. எடு


ஸ்ருதி அவனின் அவசரம் புரிந்து ஃபோன் எடுத்து போலீஸ்க்கு முயற்சி செய்தாள்… ஆனால் அதுவோ


“வணக்கம்! உங்கள் பகுதி நெட்வொர்க் இணைப்புக்கு அப்பால் உள்ளது. தயவுசெய்து பின்னே முயற்சிக்கவும்” என்று வந்தது. அப்போது தான் ஃபோன் சிக்னல் பார்த்தால் ஒரு கோடு தான் இருந்தது.


ஸ்ருதி - நெட்வொர்க் இல்லை ரோஹன்.. அய்யயோ இப்போ என்ன செய்யுறது… என்றாள் பதற்றமாக.


ரோஹனுக்கும் உள்ளே பயமாக இருந்தாலும் வெளியே காட்டவில்லை. கார் எடுத்துக்கொண்டு தப்பிப்பதே இப்போது ஒரேவழி.


அங்கே உள்ள வீட்டில் எல்லாம் கதவை தட்டி ஹெல்ப் கேட்பது அந்நேரத்துக்கு சரியாக படவில்லை. யாரும் உதவி செய்வார்களா தெரியவில்லை, மற்றவர்களையும் பிரச்சனையில் இழுத்து விட மனம் வரவில்லை. திரும்ப வீட்டுக்கே செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம். மேலும் அஞ்சனா கீழே சென்றாலா என்பது உறுதியாக தெரியாது.


ரோஹன் - கீழ போன டவர் கிடைக்கும். நம்ம இந்த வழியாவே கீழ போகலாம். என்கிட்ட கார் சாவி இருக்கு. (பையில் இருந்து சாவி எடுத்து காட்டி) இந்த பட்டன் பிரஸ் பண்ணா கார் அன்லாக் ( Unlock ) ஆகிடும். உனக்கே தெரியும்ல கார் அன்லாக் ஆன லைட் எரியும், சத்தம் வரும் சோ நம்ம வேகமா உள்ள ஏறி உட்காந்துரனும் சரியா??? ஓகே தான??


ஸ்ருதி - எனக்கு பயமா இருக்கு. என்னால முடியும்னு தோணல. வா ரோஹன் வீட்டுக்கே போயிடலாம். பிளீஸ்


ரோஹன் - ஸ்ருதி சொல்றத புரிஞ்சிக்கோ…நம்ம வெளிய போனா ஆபத்து. அஞ்சனா கீழ போனாலானே தெரியல. வா கார் பார்க்கிங் போகலாம் என அவள் கையை பிடித்துக்கொண்டு கொண்டு பேசினான்.


ஸ்ருதி - எனக்கு என்னோட பிரெண்ட் பத்தி நல்லா தெரியும். அவா கீழே போயிருப்பா கண்டிப்பா.


ரோஹன் - இது ரிஸ்க் எடுக்குற நேரம் இல்லை. வா ஸ்ருதி பிளீஸ் என்றவன் அவளை கையில் பிடித்துக்கொண்டே எமர்ஜென்சி படி வழியில் இறங்க ஆரம்பித்துவிட்டான்.


அஞ்சனா பொது வழியில் இறங்கினாள் தான் ஆனால் கீழே செல்லாமல் மூன்றாவது படியிலேயே அமர்ந்துகொண்டு இருந்தாள். ஸ்ருதிக்கு அவள் தோழியை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் அஞ்சனா சரியாக தான் கணக்கு போட்டு வைத்திருக்கிறாள்.
 
Top